search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை தண்டனை"

    • வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், வீ.கே. புதூர் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு போலீசார் வாகன சோதனையின்போது கள்ள ரூபாய் நோட்டு வைத்திருத்த இடையர்தவனை ஐயப்பன் (வயது 37), தாயார் தோப்பு சேர்மலிங்கம்(50), மோசஸ் ராஜ்குமார்(44), சங்கரன்கோவில் மணிகண்டன்(57), ராஜபாளையம் வீரபாண்டியன்(57) மற்றும் ராஜபாண்டியை சேர்ந்த ராஜேந்திரன்(52) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இவ்வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த அப்போதைய வீ.கே.புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசாருக்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    • சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக பெண் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • டேராடூனில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த 16 வயதுடைய தனது உறவுக்கார சிறுவனுடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார்.

    இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இதை அறிந்த சிறுவனின் தாயார் அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அந்த சிறுவனின் தாயார் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி டேராடூனில் உள்ள வசந்த் விகார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக அந்த பெண் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது அந்த பெண் 8 மாத கர்ப்பமாக இருந்தார். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் இது தொடர்பாக டேராடூனில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த 30 வயது பெண்ணுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த தண்டனை உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் முறையாகவும், அரிதான நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

    • கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவுர்மன் சிங்கை கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் சிலர் அடித்துக் கொலை செய்தனர்.
    • அர்ஷ்தீப் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் உள்ள ஷ்ரூஸ்பெரி நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அவுர்மன் சிங் (வயது 23). டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவுர்மன் சிங்கை கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் சிலர் அடித்துக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அர்ஷ்தீப் சிங் (24) ஜக்தீப் சிங் (23), ஷிவ்தீப் சிங் (27) மற்றும் மன்ஜோத் சிங் (24) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவுர்மன் சிங் கொலை வழக்கு ஷ்ரூஸ்பெரி நகர கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இதில் அர்ஷ்தீப் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் 122 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் அவுர்மன் சிங்கை ரகசியமாக கண்காணித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுக்மந்தீப் சிங்குக்கு (24) 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    • மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும் அவர்களது அலட்சியத்தால் ஈதன் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
    • வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஆக்ஸ்போர்டு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி ஈதன் கிரம்ப்ளே என்ற 15 வயது மாணவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

    இந்த வழக்கில் தற்போது 17 வயதாகும் ஈதன் கிரம்ப்ளேவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே ஈதனின் தந்தை ஜேம்ஸ் கிரம்ப்ளே, தாய் ஜெனிபர் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும் அவர்களது அலட்சியத்தால் ஈதன் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    விசாரணையின்போது புதிதாக வாங்கிய துப்பாக்கியை வீட்டில் பத்திரப்படுத்தவில்லை என்றும், தங்கள் மகனின் மனநலம் மோசமடைந்து வருவதற்கான அறிகுறிகளைப் பற்றி அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் மாணவன் ஈதன் தனது வீட்டு பாடத்தின்போது ஒரு துப்பாக்கி, ஒரு தோட்டா, காயமடைந்த நபரின் படங்களை வரைந்துள்ளார்.

    இதையும் பெற்றோர் கவனிக்க தவறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கில் ஜேம்ஸ் கிரம்ப்ளே, ஜெனிபருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தடுக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறவிட்டதாக நீதிபதி தெரிவித்தார். அமெரிக்காவில் முதல் முறையாக துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவனின் பெற்றோருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
    • இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 71) மீது பணமோசடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் அவர் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை விற்று ஊழல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தோஷகானா ஊழல் எனப்படும் இந்த வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி (59) ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த ஜனவரி 31-ந்தேதி முதல் அவர்கள் இருவரும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே இந்த தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி அமீர் பரூக் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    எனினும் அவர்கள் விடுதலை செய்யப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதாவது அவர்கள் இருவருமே மற்றொரு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

    இதனால் மற்ற வழக்குகளிலும் விடுதலை செய்யப்படும்வரை அவர்கள் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். எனவே இது அவர்களுக்கு ஒரு தற்காலிகமான நிவாரணம் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    • நீண்ட நாட்களாக இந்த தொல்லையில் இருந்த சிறுமி, ஒரு நாள் இதுபற்றி புகார் செய்தார்.
    • வழக்கு விசாரணை சாவக்காடு முதலாவது சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சாவக்காடு திருவத்திரை பகுதியைச் சேர்ந்தவர் மொய்து (வயது 70). இவர் 14 வயது சிறுமியை கடந்த சில ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.

    நீண்ட நாட்களாக இந்த தொல்லையில் இருந்த சிறுமி, ஒரு நாள் இதுபற்றி புகார் செய்தார். அதன்பேரில் சாவக்காடு போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து மொய்துவை கைது செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை சாவக்காடு முதலாவது சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் மொய்துவுக்கு ஆயுள் தண்டனையும், 64 ஆண்டுகள் கூடுதல் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • கைதான ராமேசுவரம் மற்றும் நாகை மீனவர்கள் கைதான வழக்கு இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
    • விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஓரிரு நாளில் நாடு திரும்புவார்கள்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 17-ந்தேதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர்.

    மேலும் எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த ஆரோக்கிய சுகந்தன், இஸ்ரோல் ஆகியோரின் 2 விசைப்படகுகளை சிறைப்பிடித்தனர். அந்த படகில் இருந்த ஆரோக்கிய சுகந்தன் (38), டிக்சன் (18), சாமுவேல் (19), அந்தோணி, சுப்பிரமணி, பூமிநாதன், ராஜ், சுந்தரபாண்டியன், சீனிப்பாண்டி, பாலு, ராயப்பு லியோனார் (32) உள்பட 21 மீனவர்களை கைது செய்தனர். இவர்கள் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதேபோல் கடந்த மாதம் 13-ந்தேதி இலங்கை கடல் எல்லை அருகே மீன்பிடித்ததாக கூறி நாகப்பட்டினம் டாடா நகரை சேர்ந்த சேகர், மயிலாடுதுறை புதுக்கோட்டையை சேர்ந்த சந்துரு, மோகன், காரைக்கால் முருகானந்தம், இரும்பன், பாபு உள்பட 15 பேரை விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கைதான ராமேசுவரம் மற்றும் நாகை மீனவர்கள் கைதான வழக்கு இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 36 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிவில் 33 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மீதமுள்ள 3 மீனவர்கள் ஏற்கனவே ஒருமுறை கைதானதால் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், மற்ற 2 மீனவர்களுக்கு 6 மாத கால சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஓரிரு நாளில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • விதிமுறைகளின் அடிப்படையில் அனைத்து சிறைகளிலும் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டு வருகிறது.
    • தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 1000-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    சிறை தண்டனை பெற்று ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர் தனது குடும்பத்தினரை பார்க்க பரோலில் செல்ல சட்டப்படி அனுமதி உள்ளது. அவசர விடுப்பு மற்றும் சாதாரண விடுப்பு என இரண்டு வகை பரோல்களில் கைதிகள் சிறையில் இருந்து குறிப்பிட்ட நாட்கள் வீட்டிற்கு சென்று வரலாம்.

    குடும்ப உறுப்பினர் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ மருத்துவ சான்றிதழ் மற்றும் காவல்துறை அறிக்கையின் அடிப்படையில் கைதிகளுக்கு அவசர விடுப்பு வழங்கப்படும். இரண்டு வருட சிறை தண்டனையை முடித்த கைதிகளுக்கு பரோல் வழங்கப்படும்.

    ஒரு நபர் ஒரு வருடத்தில் மொத்தம் 60 நாட்கள் பரோலில் செல்லலாம். அதனை வருடத்திற்கு இரண்டு முதல் நான்கு முறை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விதிமுறைகளின் அடிப்படையில் அனைத்து சிறைகளிலும் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கேரள சிறைச்சாலைகளில் பரோலில் வெளியே சென்ற 67 ஆயுள் தண்டனை கைதிகள் திரும்பி வரவில்லை. அவர்கள் அப்படியே தலைமறைவாகி விட்டனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய 4 மத்திய சிறைச்சாலைகள் மட்டுமின்றி, 3 திறந்தநிலை சிறைச்சாலைகள், 3 பெண்கள் சிறைச்சாலைகள், 13 மாவட்ட சிறைச்சாலைகள், 15 சிறப்பு நிலை சிறைச்சாலைகள், 16 துணை சிறைச்சாலைகள் மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளிகள் இருக்கின்றன.

    இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 1000-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைகளில் கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டு வரை பரோலில் சென்ற ஆயுள் தண்டனை கைதிகள் 67பேர் சிறைக்கு திரும்பி வரவில்லை. அவர்கள் பரோல் முடிந்து திரும்பி வராமல் தலைமறைவாகிவிட்டனர்.

    இவர்கள் அனைவருமே கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் ஆவர். மற்ற குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற 3 கைதிகளும் இதே போல் மாயமாகி இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்து கேரள சிறைகளில் இருந்து பரோலில் சென்ற 70 கைதிகள் மாயமாகி இருக்கிறார்கள். அவர்கள் 70 பேரும் மாயமாகி பல ஆண்டுகள் ஆகியும் அவர்களை பற்றி எந்த தகவலும் இல்லை.

    நெட்டுக்கல்தேரி திறந்தவெளி சிறையில் இருந்து கடந்த 1990-ம் ஆண்டு ராமன் என்ற கைதி பரோலில் சென்ற நிலையில் மாயமானார். அவர் மாயமாகி 34 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவரைப் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    அதேபோன்று கடைசியாக 2022-ம் ஆண்டு அனில்குமார் என்ற ஆயுள் தண்டனை கைதி பரோலில் சென்ற நிலையில் மாயமாகி விட்டார். அவரும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. பரோலில் சென்று மாயமான கைதிகள் அனைவரும் தொடர்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கருப்படுகிறது.

    ஆனால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தலைமறைவாக வாழ்ந்து குற்ற செயல்களில் எதுவும் ஈடுபடுகிறார்களா? என்பதை சிறைத்துறை மற்றும் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கேரளாவில் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.

    • எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர்.
    • கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் காளியப்பன் (53), அசிலன் (18), கோடி மாறி (65), சேக் அப்துல்லா (35), தங்கராஜ் (54), ஜெயராமன் (40), சரவணன் (24) ஆகிய 7 பேர் பத்மநாதன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளில் கடந்த 9-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அதேபோல் காரைக்காலை சேர்ந்த செல்வமணிக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மேட்டை சேர்ந்த கந்தசாமி, கிழிஞ்சல் மேட்டை சேர்ந்த சுந்தரமூர்த்தி, தரங்கம்பாடி சேர்ந்த ஆனந்தாபால், புதுப்பேட்டையை சேர்ந்த கிஷோர், ராஜ்குமார், அன்புராஜ், மதன் நாகப்பட்டினத்தை சேர்ந்த செந்தில் உள்ளிட்ட 15 பேர், கடந்த 6-ந்தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் மீன் பிடிக்க சென்றனர்.

    கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் இலங்கை நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை அருகே இந்திய கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர்.

    கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் மீதான வழக்கு இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதி பாலன் 19 மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். படகோட்டிகள் 3 பேருக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்தும் அவர் தீர்ப்பு கூறினார். 3 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு ஜூன் மாதம் 7-ந்தேதி விசாரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    • சிறப்பு கோர்ட்டு, எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.
    • தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.

    சென்னை:

    பா.ஜனதாவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர். கடந்த 2018-ம் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான ஒரு பதிவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு, எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், 'மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுதிவைக்கிறேன். மனுவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதில் அளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

    • எல்லைதாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 19 பேரில் 18 மீனவர்களை விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
    • ஜான்சன் என்பவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 7-ந்தேதி காலை 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையேயான இந்திய கடல் எல்லை பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தை சேர்ந்த ரீகன், சசிக்குமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகை சிறைபிடித்தனர். மேலும் அதில் இருந்த ஜான்சன், மெட்டன், அந்தோணி டிஸ்மர், முனியசாமி, ஜேசுராஜா, சேகர், முனியசாமி, கிளவர்சன், பிரசாந்த், பிரபாகரன், செல்வராஜ், முனியசாமி, செல்வதாமஸ், ஆரோக்கியம், ஆஸ்வார்ட் உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனர்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிவடைந்தையடுத்து இன்று அவர்கள் மீண்டும் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இதில் எல்லைதாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 19 பேரில் 18 மீனவர்களை விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. ஜான்சன் என்பவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ஏற்கனவே கடந்த வாரம் 3 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை எதிர்த்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தண்டனை அளித்திருப்பது சக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்த மீனவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    • சிறைச்சாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நவால்னி உயிரிழந்தார்
    • கணவரை கொன்றவர்களின் முகங்களை உலகிற்கு காட்டுவேன் என்றார் யூலியா

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் விமர்சகரும், ரஷிய அரசியலில் எதிர்கட்சி தலைவராகவும் கருதப்பட்ட அலெக்சி நவால்னி (Alexei Navalny) பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 19 வருடங்களுக்கும் மேலாக நீண்டகால சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு வடகிழக்கே, சுமார் 1200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்ப் (Kharp) நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

    இவ்வருடம் ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிறைச்சாலையில் நவால்னி உயிரிழந்தார். சிறைச்சாலை வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மயங்கி விழுந்தவர், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அலெக்சி நவால்னியின் திடீர் மரணம் அவரது ஆதரவாளர்களையும், உலகெங்கும் உள்ள அரசியல் தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில், அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா (Yulia Navalnaya) இது குறித்து தொலைக்காட்சியில் கண்ணீர் மல்க பேசினார்.


    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    3 தினங்களுக்கு முன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் என் கணவர், அலெக்சி நவால்னியை கொன்று விட்டார்.

    கிட்டத்தட்ட 3 வருடங்களாக பல்வேறு துன்புறுத்தல்களை சிறையில் அனுபவித்து வந்த அலெக்சி சிறையிலேயே உயிரிழந்தார்.

    அவர் விட்டு சென்ற பணிகளை நான் தொடர்ந்து செய்வேன்.

    அலெக்சிக்காக நாம் செய்ய கூடியது மேலும் தீவிரமாகவும், மேலும் வேகத்துடனும் போராடுவதுதான்.

    போர், ஊழல், அநீதி, சுதந்திரமில்லாத தேர்தல், கருத்து சுதந்திர முடக்கம், நாட்டில் நிலவும் அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிராக அவர் முன்னெடுத்த போராட்டத்தை நாம் மேலும் வலுப்பெற செய்து போராட வேண்டும்.

    எனது கணவரை கொன்றவர்களை நான் வெளியுலகிற்கு காட்டுவேன். அவர்களின் முகங்களையும், பெயர்களையும் உலகம் பார்க்குமாறு நாம் காட்டுவோம்.

    இவ்வாறு யூலியா கூறினார்.

    யூலியா நவல்னயா, பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அலெக்சி நவால்னியின் தாயிடமோ, வழக்கறிஞரிடமோ அவரது உடலை வழங்க ரஷிய அரசு மறுத்து விட்டது.

    ×